இங்கிலாந்து நாட்டை பிரான்ஸ் நாடு தன் எதிரி நாடாக கருதிய காலம் அது. அப்போது பிரான்ஸ் மன்னராக நெப்போலியன் இருந்தார். இவர் இங்கிலாந்து விஞ்ஞானியான ஜென்னரிடம் மிகுந்த மரியாதையை வைத்திருந்தார். ‘எதிரி நாட்டு விஞ்ஞானிக்கு இவ்வளவு மதிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்...’ என்று நெப்போலியனிடம் கேட்டனர் நண்பர்கள். ‘என்னைப் போன்ற மன்னர்களின் பெருமை, போரில் எவ்வளவு வீரர்களை கொன்றோம் என்பதில்தான் இருக்கிறது. எங்களால் ஒரு உயிரை காப்பாற்ற முடியாது. ஆனால் அவரோ ‘அம்மை’ போன்ற நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். உயிர்களை அழிக்கும் எங்களை விட, காக்கும் அவரே உயர்ந்தவர். அதனால் அவரை மதிக்கிறேன்’ என்றார். நெப்போலியனிடமிருந்து இந்த பதிலைக் கேட்டவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.