பதிவு செய்த நாள்
15
அக்
2021
08:10
உடுமலை : அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உற்சவ மூர்த்திகளுக்கு, உடுமலை கோவிலில், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் ஆலயத்தில், உற்சவ மூர்த்திகளாக பூஜை செய்வதற்காக, கும்பகோணத்தில், ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதாதேவி மற்றும் அனுமன் ஆகியோருக்கு ஐம்பொன் சிலைகள் தயாராகியுள்ளன. இந்த உற்சவ மூர்த்திகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில், சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு, நவ., 8ல் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்கிறது. அங்கிருந்து, அயோத்தி ஆலயத்திற்கு ரத ஊர்வலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உற்சவ மூர்த்தி சிலைகள் நேற்று முன்தினம், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, உற்சவ மூர்த்திகளுக்கு, பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலையில், ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி - சீதாப்பிராட்டி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.