விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் பணியாளராக ஈடுபட்டார். ஒருநாள் மாலையில் அவர் வெளியில் சென்ற போது மழையில் நனையவே நடுக்கம் வந்தது. சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் கருப்பமுத்து. அவரருகே முதியவர் ஒருவர் நடுங்கியபடி வருவதைக் கண்டார். அவர் மீது இரக்கப்பட்டு, ‘உங்களுக்கு சுருட்டு வேண்டுமா?’ எனக் கேட்டார். அவரும் வாங்கி விட்டுச் சென்றார். அதன் பின் கருப்பமுத்து கோயிலுக்குச் சென்ற போது, முருகனுக்கு அருகில் சுருட்டு இருப்பதைக் கண்டார். நடந்ததை மற்றவர்களிடம் சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனடிப்படையில் மாலைநேர பூஜையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கம் வந்தது. பிற்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இதற்கு தடை விதித்தார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘உதவி செய்யும் மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதே என் எண்ணம். அதனால் தடை சொல்லாதே” என ஆணையிட்டார்