காஞ்சி மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 1973ல் நாடெங்கும் பாத யாத்திரை செய்யப் புறப்பட்டார். சுவாமிகளைப் பற்றித் தமக்கே உரிய பாணியில் அவர் பதிவு செய்துள்ளார். ‘கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ அந்த ஒளியோடு மகாயோகி போய்க் கொண்டிருக்கிறார். நாற்பது வயதுக்குள்ளாகவே ஆதிசங்கரர் காலடியில் இருந்து புறப்பட்டு இமயம் முதல் குமரி வரை தன் காலடியைப் பதித்தார். அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை. ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.
மகாநதி பாறையின் மீது மோதினாலும் நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது. மகாயோகியின் வைராக்கியம் மணம் மிக்கது. பசுமையானது. தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும் போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகாயோகம் மலர்கள் துாவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கு போய்க் காஞ்சிப்பெரியவர் ஓரிரவு தங்கிய போது. ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது’ என்று மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம். அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘ஹிந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீமஹா சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞானப்பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சிக் கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.
அதோ அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். சாலையின் இருமருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூட்டம் திரள்கிறது. குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் போது தாய் அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.
அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒருநாளும் இருந்ததில்லை. பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே. அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்’ என்கிறார் கண்ணதாசன்.