பதிவு செய்த நாள்
17
நவ
2021
05:11
பேரூர்: பேரூரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்கும் வகையில், பேரூர் கோவில் தேர் செட்டில், தி.மு.க.,வினர் பிளக்ஸ் வைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ’மக்கள் சபை’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதனால், அமைச்சரின் நிகழ்ச்சி நடந்த பகுதிகளில், அமைச்சரை வரவேற்கும் வகையில், தி.மு.க.,வினர் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். தி.மு.க., நிகழ்ச்சிகளில், கலந்து பிளக்ஸ் பேனர், கட்அவுட்கள் வைக்கக்கூடாது என, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இருப்பினும், பிளக்ஸ் பேனர் கலாச்சாரம், தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பேரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்ட, ’மக்கள் சபை’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று தி.மு.க., சார்பில், பல்வேறு இடங்களில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தின் முன் உள்ள, தேர் செட்டிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று, தி.மு.க.,வினர் பிளக்ஸ் வைத்திருந்தனர். கோவில் தேர் என்றும் பார்க்காமல், அதில், அரசியல் கட்சி பேனர் வைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.