வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு கோயில் மலைப்பகுதியில் பெய்த மழையினால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. ஏற்கனவே பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கு வந்திருந்தனர். ஆனால், நீர்வரத்து இருப்பதால் அவர்களை போலீஸ் மற்றும் வனத்துறையினர் மலையேற அனுமதிக்கவில்லை. இதனால் தாணிப்பாறை வாசலில் சூடம் ஏற்றி வணங்கி சென்றனர். இந்நிலையில் கோவிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு பவுர்ணமி வழிபாடு நடந்தது. சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விசஸ்வநாதன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.