பதிவு செய்த நாள்
06
டிச
2021
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மூக்கு பொடி சித்தரின் மூன்றாம் ஆண்டு குரு பூஜை வழிபாடு நடந்தது. திருவண்ணாமலையில், 30 ஆண்டுகளுக்கு முன், சின்னசேலத்தை சேர்ந்த முருகானந்தம் சுவாமிகள் என்பவர், கிரிவலப்பாதையில், அடி அண்ணாமலை பகுதியில் கவுதம ஆசிரமம் பக்கத்தில் தியானம் மேற்கொண்டார். இவர் மூக்கு பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால் ஆசீர்வாதம் வாங்க செல்லும் பக்தர்கள், மூக்கு பொடி வாங்கி செல்வர். உள்ளூர், வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் என பலர். அவரிடம் ஆசீர்வாதம் வாங்க செல்வர். சில நேரங்களில், ஆசீர்வாதம் வாங்க செல்லும் பக்தர்களை கையில் கிடைத்த பொருளை கொண்டு அடிப்பார். அவரிடம் அடி வாங்கினால், கர்மா தொலைந்து, நல்லது நடப்பதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த மூக்கு பொடி சித்தர், 2018 டிச.,9ல், சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் முக்கி அடைந்தார். இதையடுத்து இவரது உடல், கிரிவலப்பாதையில், வாயு லிங்கம் அருகே அடக்கம் செய்யப்பட்டு ஆஸ்ரமம் அமைத்து தினசரி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதில், நேற்று மூன்றாம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், மூக்கு பொடி சித்தர் சமாதியை வழிபட்டனர்.