பதிவு செய்த நாள்
11
டிச
2021
10:12
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், திருப்பணிகள் மிக நேர்த்தியாக நடைபெற்று வருகின்றன. அதன் கும்பாபிஷேகம் ஜன., 23ம் தேதி விமர்சையாக நடத்தப்படும், என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பிரசித்தி பெற்ற சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேம் நடக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நிறைவுபெறும் தருவாயில் உள்ள திருப்பணிகளை நேற்று (டிச.09) பார்வையிட்டார். பின், பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வடபழநி ஆண்டவர் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், 2007ல் நடந்தது. அதன் பிறகு ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
எனவே, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன. தற்போது, திருப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திருப்பணிக்காக, கோவில் தக்கார் எல்.ஆதிமூலமும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரனும் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, ஜன.,23ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள தியான மண்டபம், அபிஷேக மண்டபம், மடப்பள்ளி உள்ளிட்ட மண்டபங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 33 அடி உயர தங்கத்தகடு வேயப் படும் கொடிமரம், அழகிய வடிவில் இடம் பெற உள்ளது .இக்கோவிலின் மரத்தேர், தங்கத்தேர் அழகுற புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோவிலில், சுபமுகூர்த்த நாட்களில் பக்தர்கள் திருமணங்களை நடத்த ஏதுவாக, 43 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு பின், அலுவலகம் கோவிலின் பின்புறம் உள்ள இடத்தில் அமைக்கப்பட உள்ளது. காலணி பாதுகாப்பு மையம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளியலறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள், 13 கோடி ரூபாய் செலவில் நடைபெற உள்ளது .வடபழநி ஆண்டவர் கோவில் அருகில் உள்ள, பழமை வாய்ந்த ஆதிமூல பெருமாள் கோவிலிலும் திருப்பணிகள் துவக்கப்பட்டு, சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து, அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். மேலும், வடபழநி ஆண்டவர் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணப்படும். இந்த அரசு, வெளிப்படைத் தன்மையுடையது. எனவே, இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான வரவு செலவு கணக்குகள் வெளிப்படையாக, கும்பாபிஷேகத்திற்குப் பின் நிச்சயம் வெளியிடப்படும். இறை சொத்து இறைவனுக்கேஎன்ற தாரக மந்திரத்தோடு, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி, எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.