பதிவு செய்த நாள்
21
டிச
2021
04:12
மேட்டுப்பாளையம்: காரமடையில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரமடை கிழக்கு ரத வீதியில், மிகவும் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசன தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறந்து, நஞ்சுண்டேஸ்வரர், லோக நாயகி அம்பாள் சன்னதியில், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்பு சிறப்பு அலங்கார பூஜையும், தீபாராதனை, வேதபாராயணம் ஆகயவை செய்யப்பட்டன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, லோகநாயகி சமேத நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியை தரிசித்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, திருவாதிரை களி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அர்ச்சகர் ஞான சுவாமிநாத குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு தேவி கருமாரியம்மன், மனோன்மணி அம்மையார் உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆருத்ரா தரிசன தினத்தை முன்னிட்டு, நேற்று காலை திருக்கல்யாண வைபவம் பூஜை நடந்தது. இதில் மூலத்துறையை சேர்ந்த குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் பங்கேற்று திருக்கல்யாண நிகழ்வை நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரத்தில் ராஜ அஷ்ட விமோசனம் மகாகணபதி கோவில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசன தினத்தை முன்னிட்டு, பிரகல் நாயகி சமேத பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷே அலங்கார பூஜைகள் நடந்தன இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.