பதிவு செய்த நாள்
21
டிச
2021
04:12
ஆலாந்துறை: பூண்டி வெள்ளிங்கிரி ஏழாவது மலையில் உண்டியல் காணிக்கை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலையுச்சியில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.
இந்த ஏழாவது மலையில் உள்ள உண்டியல் காணிக்கை, ஆண்டுதோறும் அறநிலையத்துறை சார்பில் தனியாருக்கு ஏலம் விடப்படுகிறது. தனியாருக்கு ஏலம் விடுவதை எதிர்த்து, கோவையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ஏழாம் மலையில் உண்டியல் ஏலம் விட, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து மனுதாரர் செந்தில்குமார் கூறுகையில்,"ஏழாவது மலையில் உள்ள உண்டியல், இந்த மாதம் ஏலம் விடுவதாக இருந்தது. தற்போது ஏலம் விட கோர்ட் தடை விதித்துள்ளது. ஏழாவது மலையில் உள்ள உண்டியலை, எடுத்து நடத்துவது குறித்து அறநிலையத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,"என்றார். இதுகுறித்து பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செயல் அலுவலர் சந்திரனிடம் கேட்டபோது,"வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த ஆணையும் வரவில்லை. அதனால் தற்போது எதுவும் கூற முடியாது,"என்றார்.