பதிவு செய்த நாள்
21
டிச
2021
04:12
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் 150 க்கும் மேற்பட்ட கோலில்களில் குறைகள் சரி செய்யப்பட்டு, திருப்பணிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். நாகை மாவட்டத்தில், எட்டுக்குடி சுப்பிரமணியர் சுவாமி, திருவாய்மூர் தியாகராஜர் சுவாமி, திருக்குவளையில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான தியாகராஜர் சுவாமி கோவில்களில், நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், குடமுழுக்கு விழா நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்த கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதத்தில் 150 க்கும் மேற்பட்ட கோவில்களில், குறைகள் சரி செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், வருமானம்,செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை தொகையினை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றார். ஹிந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.