பதிவு செய்த நாள்
24
டிச
2021
01:12
கோவில் சுவர்கள் மற்றும் சிற்பங்களின் பழமைக்கு ஊறு நேராமல், மூலிகை கலவை துணை கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில், வடபழநி ஆண்டவர் கோவிலின் பாரம்பரிய கலை பாதுகாப்பாளரான குணசேகரன் ஈடுபட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நம் பாரம்பரியமான கோவில்கள், மக்களின் அறியாமை காரணமாக பொலிவு இழந்துள்ளது. கோவில் கருங்கல் சுவர் மீது சுண்ணாம்பு பூசியும், பெயின்ட் அடித்தும், சிற்பங்களில் எண்ணெய் பூசியும், அவற்றின் பழமையையும், அழகையும் இழக்கச் செய்து விட்டனர். காலம் காலமாக தொடரும் தவறுகளை திருத்த, மணல் கலந்த தண்ணீர் மூலமாக அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடித்து, ஒரு காலத்தில் சுத்தம் செய்தனர். இதனால் சிற்பங்கள், துாண்களில் பின்னம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. எனவே, கோவில் சுவர், துாண், சிற்பங்களை தற்போது மூலிகை கலவை கலந்த தண்ணீர் வாயிலாக மென்மையாக கழுவி சுத்தம் செய்கின்றனர்.இதற்கான பயிற்சியை உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை புதுப்பிக்கும் தேசிய ஆராய்ச்சி மையத்தில் வழங்குகின்றனர். அங்கு பயிற்சி பெற்றவர் குணசேகரன். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் உள்ள சிற்பங்களை, ௨௦ ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார்.தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ள, சென்னை வடபழநியாண்டவர் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த பணிகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது:முன்னோர் கொடுத்துச் சென்றுள்ள பொக்கிஷம் தான், நம் கோவில்கள். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், மீண்டும் இது போல உருவாக்க முடியாது. நாம் செய்ய வேண்டிய ஒரே நல்ல காரியம், இருக்கிற பொக்கிஷங்களை, அதன் தன்மை மாறாமல், அப்படியே அடுத்தடுத்து வரும் தலைமுறைக்கு தர வேண்டியது அவசியம். அதற்கான தலையாய பணியே, மூலிகை கலவை மூலமாக கோவில்களை புதுப்பிப்பது. இதன் வாயிலாக கோவில் கருங்கல் சுவர்களும், சிற்பங்களும், கோவில் கட்டும் போது எப்படி இருந்ததோ அதே உறுதியுடனும், கம்பீரத்துடனும், அழகுடனும் மீண்டு வரும்.இதற்காக தேவைப்படும் இயந்திரங்களையும், மூலிகை கலவையையும் நானே தயார் செய்துள்ளேன். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளிட்ட பல தமிழக கோவில்களில் பணியாற்றிஉள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.