திருத்தணி : அம்பத்துார் பகுதி சேர்ந்த ஹிந்து கோவில்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகம், மலைப்படிகள் மற்றும் தேர் வீதி ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்து உழவாரப் பணி நேற்று நடந்தது.
இப்பணிகளை கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி துவக்கி வைத்தார். தொடர்ந்து ஹிந்து கோவில்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்ற நிறுவனர் எஸ். கணேசன் தலைமையில், 75க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மலைக்கோவில் வளாகம் மற்றும் படிகள் ஒரம் இருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.மேலும், மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். தொடர்ந்து மலைக்கோவிலில் பக்தர்களிடம் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, துணிபைகள் வழங்கினர். நேற்று, காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை முருகன் கோவிலில் உழவாரப் பணிகள் மேற்கொண்டனர்.