கேரளா ஆலத்தியூர் கோயிலில் உள்ள அனுமன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவரை தரிசித்தால் குழந்தைகளுக்கு இரவில் நன்கு துாக்கம் வரும். ‘ஆலத்தியூர் அனுமனே நிம்மதி தருவாயாக’ என வேண்டிக் கொண்டால் கெட்ட கனவுகள் வராது. ராம சேவைக்காக இலங்கைக்கு அனுமன் புறப்பட்ட போது, சீதையின் அடையாளங்களை ராமர் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன ரகசியங்களை தலைசாய்த்தபடி அனுமன் அக்கறையுடன் கேட்டார். அப்போது முப்பத்தி முக்கோடி தேவர்களும் தங்களின் சக்தியை அனுமனுக்கு வழங்கினர். அதனடிப்படையில் இக்கோயிலில் அனுமன் நின்றபடியே தலை சாய்த்த கோலத்தில் இருக்கிறார். ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதியில் நடந்த இந்த நிகழ்வின் போது தான் அனுமனுக்கு அதிக சக்தி கிடைத்தது என்பதால் இங்கு வழிபட்டால் கிரகதோஷம் பறந்தோடும். அனுமனுடன் உரையாடிய ராமர் சாப்பிடுவதற்கு அவல் கொடுத்தார். இதனால் இங்கு அனுமனுக்கு அவல் நைவேத்யம் செய்கின்றனர். மனைவியை பிரிந்த நிலையில் இருப்பதால் ராமர் இக்கோயிலில் சீதையின்றி காட்சியளிக்கிறார். இங்குள்ள கல்லால் ஆன திடலைத் தாண்டினால் உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். அனுமனுடன் ராமர் உரையாடிய போது அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது எனக் கருதி லட்சுமணன் சற்று தள்ளிப் போய் நின்றார். அந்த இடத்தில் தான் லட்சுமணருக்கான கோயில் உள்ளது. எப்படி செல்வது: மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திரூர் நகரில் இருந்து 8 கி.மீ., * மலப்புரத்தில் இருந்து 32 கி.மீ., * கோழிக்கோட்டில் இருந்து 59 கி.மீ.,