பதிவு செய்த நாள்
30
டிச
2021
04:12
கர்நாடகா மங்களூரு அருகிலுள்ள கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயில் புகழ் மிக்கது. இந்த அம்மனை ‘துர்காம்மா’ என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். நினைத்தது நிறைவேற இங்கு யட்ச கானம் என்னும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
ஒரு காலத்தில் இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. ஜாபாலி முனிவர் பிரச்னை தீர தவத்தில் ஈடுபட்டார். காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்குச் சென்று வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டார். ஆனால் பாவிகள் நிறைந்த பூமிக்கு செல்ல நந்தினி விரும்பவில்லை. அத்துடன் தன்னை பூலோகத்திற்கு அனுப்பக்கூடாது என பார்வதியை சரணடைந்தது. “நீ பசுவாகச் செல்ல வேண்டாம். புண்ணியம் மிக்க நதியாக மாறி மக்களுக்கு பணியாற்று” என உத்தரவிட்டாள் பார்வதி.
‘நேத்திராவதி’ என்ற பெயரில் நந்தினியும் இங்கு ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன், பூவுலகில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து உயிர்களைக் காக்கும்படி பார்வதியிடம்
முனிவர்கள் வேண்டினர். அசுரனை வதம் செய்ய பார்வதி மோகினியாக தோன்றினாள். அவளது அழகில்
மயங்கிய அசுரனும் பின்தொடர்ந்தான். நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின் பார்வதி ஒளிவது போல பாவனை செய்ய அசுரன் அவளை பிடிக்க முயன்றான். வண்டு வடிவெடுத்த பார்வதி அவனைக் கொன்றாள். . உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர். உக்கிரம் தணிந்த அவள் ஆற்றின் நடுவில் ‘துர்கா பரமேஸ்வரி’ என்னும் பெயரில் கோயில் கொண்டாள். அம்மன் சிவலிங்க வடிவில் இருக்கிறாள். அவளைப் பெண்ணாக அலங்கரிக்கின்றனர். நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால் ‘கடில்’ எனப்பட்டது. ‘கடில்’ என்றால் ‘மடி’. கடில் என்பது தற்போது கட்டீல் எனப்படுகிறது.
கோயிலின் பின் பகுதியில் ஆறு இரண்டாக பிரிந்து கோயிலைச் சுற்றி ஓடுகிறது. இயற்கை வளம் மிக்க காட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குள் நுழையும் போது சலசல என ஓடும் நதியின் சத்தம் ரம்மியமாக உள்ளது. நதியின் நடுவில் இருப்பதால் கருவறை ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக தருகின்றனர்.
வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்து பிரச்னை தீர பக்தர்கள் இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். தமிழகத்தில் மதுரை மல்லிகை போல, கர்நாடகாவில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை புகழ் பெற்றதாகும். அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இது முக்கிய இடம் பிடிக்கிறது.
திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் கிடைக்க மல்லிகைப்பூவை வாழைநாரில் தொடுத்து
அணிவிக்கின்றனர். பக்தர்கள் ‘துர்க்காம்மா’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாக தேவதை, பிரம்மா சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 26 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 9:30 மணி