அடியவர்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கள். பரமாச்சாரியார் எல்லோரிடமும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அமிர்தமாய் இனிக்கிறது! எத்தனையோ அறிவுரைகள், அன்பர்களின் கேள்விகளுக்கு பதில் என உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய உரையாடல் முடிவுக்கு வந்து, பரமாச்சாரியார் மடத்தின் உள்ளே ஓய்வெடுக்கச் செல்லப் போகிறார். அப்போது ஓர் அன்பருக்கு அந்தக் கேள்வியைக் கேட்டு விடலாம் என்று தோன்றியது. கேட்டும் விட்டார். எல்லோரும் பரவசமாய், பரமாச்சாரியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆவலாய் காத்திருந்தார்கள். கேள்வி இதுதான்: ‘லண்டனைச் சேர்ந்த பால்பிரண்டன் இந்தியா வந்தபோது, அவர் தங்கியிருந்த அறையில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் ஒரு விஷயத்தை அறிவுறுத்தியதாக எழுதியிருக்கிறாரே? பூட்டிய அறையின் உள்ளே ஒளிவெள்ளத்தில் நீங்கள் தோன்றியது உண்மை தானா?’ இந்த பால்பிரண்டன் ஹிந்து மதத்தின் மீதுள்ள ஈடுபாட்டால் இந்தியா வந்தவர். ஏராளமான துறவியரை நேரடியாகச் சந்தித்து அந்த அனுபவங்களையெல்லாம் நுாலாக்கியவர். புகழ்பெற்ற துறவியரில் அவர் அதுவரை சந்திக்காதவர்கள் காஞ்சி பரமாச்சாரியாரும், ரமணரும் தான். கே.எஸ்.வெங்கடரமணி என்ற எழுத்தாளர் மூலம் பரமாச்சாரியாரின் சந்திப்புக்கு அனுமதி பெற்றார். அந்தச் சந்திப்பு அவர் வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது. பரமாச்சாரியாரின் தெய்வீகத் திருவுருவம், நிலவைப் போன்ற குளுமை தவழும் முகம், கருணை ததும்பும் பேச்சு எல்லாமே பால்பிரண்டன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தன் ஆன்மிக சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் பெற்ற அவர் இறுதியாக ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘தாங்கள் எனக்கு ஏதாவது மந்திர உபதேசம் தர இயலுமா?’ பரமாச்சாரியார் அவரைக் கனிவோடு பார்த்தார். பின் சொன்னார்: ‘அன்பனே! நான் துறவியானாலும் மடாதிபதி. இந்த மடத்திற்கு என்று சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நான் மீற இயலாது. நீ வெளிதேசத்தவன். மடம் சாராத மாபெரும் துறவி ஒருவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார். ரமணர் என்பது அவரது பெயர். நீ அவரிடம் செல்வது நல்லது. அவரைச் சந்திக்காமல் உன் நாட்டுக்குத் திரும்பாதே!’ ஆனால் ரமணரை தரிசிக்க பால்பிரண்டனுக்கு நேரம் இருக்கவில்லை. அவசரமாகத் நாடு திரும்ப வேண்டியிருந்தது. எனவே எதுவும் சொல்லாமல் பரமாச்சாரியாரிடம் விடைபெற்றுத் தான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். மறுநாள் அவர் லண்டன் கிளம்ப வேண்டும். அன்றிரவு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் நள்ளிரவில் பரமாச்சாரியார் காற்றுவெளியில் அவர் முன் தோன்றி அவரை எழுப்பினார். தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார் பால்பிரண்டன். அது கனவல்ல. உண்மைதான். மோகனப் புன்முறுவலுடன் பரமாச்சாரியார் மறுபடியும் ‘ரமணரை தரிசிக்காமல் உன் நாட்டுக்கு செல்லாதே!’ என அறிவுறுத்திவிட்டு காற்றில் கலந்து மறைந்தார்! வியப்பில் ஆழ்ந்த பால்பிரண்டன் பயணத்தைத் தள்ளிப் போட்டதும், ரமணரைச் சந்தித்ததும் வரலாறு. இந்த விஷயங்களைத் தன் புத்தகத்தில் பால் பிரண்டன் தெளிவாக எழுதியிருக்கிறார். அன்பர் கேள்வி கேட்டது இந்த சம்பவத்தின் உண்மையைப் பற்றித்தான்...... பரமாச்சாரியார் பல அற்புதங்களை நிகழ்த்துவதாகப் பலரும் சொல்கிறார்களே? அவர் வாயாலேயே இந்த அற்புதத்தைத் தான் நிகழ்த்தியதாக அவர் சொல்லப் போகிறாரா? எப்படியும் பரமாச்சாரியார் உண்மையைத் தவிர எதுவும் சொல்லப் போவதில்லை. அன்பர்கள் ஆவலாய் பரமாச்சாரியாரின் திருமுகத்தைப் பார்த்தவாறு காத்திருந்தார்கள். மெல்ல எழுந்த பரமாச்சாரியார், ‘அதனால் தான் துாங்கும்போது நல்லதை நினைத்துக் கொண்டு துாங்கவேண்டும் என்கிறேன்!’ என்று சிரித்தவாறே சொல்லிவிட்டு மடத்தின் உள்ளே சென்றுவிட்டார்!