பதிவு செய்த நாள்
02
பிப்
2022
03:02
பெங்களூரு : காங்கிரஸ் பாதயாத்திரை தோல்வியில் முடிந்ததால், கனகபுரா சங்கமத்தில் காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்த மாநில காங்., தலைவர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகாவில் 2023ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை கருதி, மேகதாதில் அணை கட்டும்படி வலியுறுத்தி காங்கிரஸ் தரப்பில் கடந்த மாதம் பாத யாத்திரை நடந்தது. எனினும், கொரோனா பரவலால் கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மாநில அரசு, பாதயாத்திரைக்கு தடை விதித்தது; காங்கிரசாரும் பாதயாத்திரையை நிறுத்தினர். விரைவில் மீண்டும் துவங்குவதாக தெரிவித்திருந்தனர்.பாதயாத்திரையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவல் ஏற்றம், இறக்கம் காணப்படுவதால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதற்கிடையில், ஹம்பியில் நடத்தப்படும் துங்கா ஆரத்தி போன்று மேகதாது அருகே உள்ள கனகபுரா சங்கமத்தில் காவிரி ஆரத்தி நடத்த மாநில காங்., தலைவர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.இது குறித்து விவாதிக்க, சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங்கை, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன் வீட்டுக்கு சிவகுமார் வரவழைத்து பேசினார்.வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் ஆனந்த் சிங் காங்கிரசில் சேருகிறாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், காவிரி ஆரத்தி குறித்து விவாதிக்கவே அவர் வந்ததாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.