மயிலாடுதுறை: பத்தாம் நாள் மகரத்தலை நாள் குருபூஜை விழாவை முன்னிட்டு குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தோத்திரப்பாடல்கள் பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து திருக்கோலக்கா இராமநாத சிவாச்சாரியார் அறக்கட்டளையில் இருந்து சிவாச்சாரியார், நாதஸ்வர வித்வான், தமிழிசை வித்வான் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி நமச்சிவாய மூர்த்திகள் ஆசிகவசமாக பொன்னாடை போர்த்தி உருத்திராக்க மாலை அணிவித்து பொற்கிழி ரூ. 5 ஆயிரம், சிறப்பு விருதும் வழங்கப்படுகிறது. குருபூஜை விழா மலராகிய திருமந்திரம் மாநாட்டு மலர் எனும் ஆதீன நூல் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து மாகேஸ்வர பூஜையும், மாலை திருவையாறு அரசு இசைக் கல்லூரி பேராசிரியர் சுவாமிநாதன் குழுவினரின் இன்னிசை கச்சேரி, இரவு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் வழிபாடு, தொடர்ந்து குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜையும், ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப் பிரவேசமும், நிறைவாக கொலு மண்டபத்தில் சிவஞான காட்சியும் நடக்கிறது.