செல்வந்தரான முகமது இக்பால் பணம் தேடுவதே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் தெருவில் சென்ற பிச்சைக்காரனிடம், ‘‘வீட்டில் பிரியாணி இருக்கிறது. நீங்கள் சாப்பிடலாமா..’’ எனக்கேட்டார் இக்பால். ‘‘நான் சாப்பிட்டு விட்டேன். வயிறு நிறைந்து விட்டது’’ என்றான். ‘‘அப்படியானால் இதை அடுத்த வேளைக்கு சாப்பிடலாமே’’ என்றார் இக்பால். ‘‘அதற்கு என்ன அவசரம். பிறகு பார்த்துக் கொள்கிறேன்’’ என்றான். ‘‘என்னப்பா.. உணவுக்கே இப்படி சொல்கிறாய். நாளைக்கே உனக்கு பணம் தேவைப்பட்டால் என்ன செய்வாய்’’ எனக்கேட்டார். ‘‘ஐயா.. நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம். எவ்வளவு காலம் நாம் உயிரோடு இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. இதற்காக நான் வாழ்நாள் எல்லாம் பணத்தை தேடி அலையமுடியுமா’’ என்றான் பிச்சைக்காரன். பிச்சைக்காரனுடைய இந்த பதில் செல்வந்தருக்கு சுளீர் என உரைத்தது. ‘இந்த ஏழைக்கு இருக்கும் புத்தி எனக்கு இல்லையே’ என வருந்தினார். பிறகு பணியாட்களை அழைத்து, ‘‘இன்று முதல் தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ எனக் கட்டளையிட்டார். பார்த்தீர்களா... உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பாரா.. என்பதே சந்தேகம்தான். என்னடா... இது எதிர்மறை எண்ணத்தை வளர்ப்பதுபோல் உள்ளதே நினைக்காதீர். இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால்.. உங்களிடம் உள்ள பணத்தை தர்மச் செயல்களுக்காக அதிகம் பயன்படுத்துங்கள். மறுமை நாளில் இதற்கான பலன் கிடைத்தே தீரும். வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி... என இருக்கும் இந்த உலகில், நற்செயல்களால் மக்கள் மனதில் நிற்கப்பாருங்கள்.