கோயில்களில் மண் அகல் தீபத்தில் விளக்கேற்றுங்கள். கோயில்களுக்கு ஏற்றும் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு நன்மை வீடு தேடி வரும். கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றுங் கள். கெட்டி மேளம் கொட்டும்.
வீட்டிற்கு பெண் விருந்தினர் வந்தால், அவர்கள் கிளம்பும்போது மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். இந்தப் பழக்கம் சுமங்கலிகளை மகிழச் செய்யும். நம் இல்லங்களை வாழையடி வாழையாக நலமுடன் வாழ வைக்கும்.
உங்கள் அருகிலுள்ள கோயில்களில் ஒவ்வொரு மாதப்பிறப்பன்று மாலையிலும் திருவிளக்கு பூஜை நடத்துங்கள். இது நீங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மங்கல வாழ்வையும், பாதுகாப்பையும் அளிக்கும். வீட்டிற்கு செல்வச் செழிப்பை அளிக்கும்.
திருவிழா நாட்களில் வீட்டில் எல்லாரும் ஒரே நேரத்தில் எழுங்கள். ஒன்றாக அமர்ந்து வழிபாடு செய்யுங்கள். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுங்கள். நல்ல விஷயங்களை மட்டும் பேசி இனிமையாகப் பொழுது போக்குங்கள்.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள். மாமாவை அடி, அப்பாவுக்கு டூ போடு போன்று ஏதும் சொல்லித்தராதீர்கள். பெரியவர்கள் நல்லதைப் பேசினால் குழந்தையும் நல்லதையே பேசும். இந்த வீடே மங்கலச்சின்னத்தின் அடையாளம்.
அருகம்புல், அகத்திக்கீரை ஆகியவற்றை பசுக்களுக்கு முடிந்தபோதெல்லாம் கொடுங்கள். வீடுகளில் மிஞ்சும் காய்கறி கழிவுகளை குப்பையில் வீசாமல் பசுக்களுக்கு கொடுங்கள். லட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் இது.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் உதவி மிகவும் உயர்ந்த உதவி. நீங்கள் நூறு ரூபாய் அவர்களுக்கு கொடுத்தால், நமக்கு தக்க சமயத்தில் அது பல மடங்காகத் திரும்பி வரும். இந்த உதவியால் நம் வீட்டுப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
வாசனையுள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அந்த இடங்களில் வசதி பெருகும். வீட்டில் தினமும் குங்குலியம் கலந்த சாம்பிரணி இடுங்கள். முடியாதவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை யாவது தூபமிட்டால் நிம்மதி நிலைக்கும். நிம்மதி தானே நிரந்தரச் செல்வம்!