பதிவு செய்த நாள்
07
ஜன
2011
02:01
பசு மேய்ப்பவன், அதை அடிக்கப் பாயவும், மரப் பொந்துக்குள் இருந்த ஸ்ரீமன் நாராயணன் அதைக் கவனித்து விட்டார். துள்ளி எழுந்தார்.ஏ கோபாலா! பசுவை அடிக்காதே, என்று துள்ளிக் குதிக்கவும், பசு அங்கிருந்து நகர்ந்தது. பசுவை நோக்கிப் பாய்ந்த தடியடி, நாராயணனின் தலையில் விழுந்தது. ரத்தம் கொப்பளித்து சிதறி, பசுவின் மீதும் பட்டது.பசு பராமரிப்பாளனான கோபாலன் நடுநடுங்கி விட்டான்.சுவாமி! தாங்கள் யார்? இந்த பொந்துக்குள் தாங்கள் தவமிருப் பது தெரியாமல் தங்களை அடித்து விட்டேனே! பசு வீணாக பாலைச் சொரிகிறதோ என நினைத்து, அறியாமல் செய்த என் தவறை மன்னித்தருள வேண்டும், என்று அவர் பாதங்களில் விழுந்து கெஞ்சியவன், அதிர்ச்சியில் அப்படியே மயக்கமடைந்து விட்டான். இதற்குள் பசு சோழராஜனின் அரண்மனைக்குள் புகுந்தது. அதன் உடலில் ரத்தக்கறையாக இருந்தது. அனைவரும் பசுவுக்கு என்னாயிற்றோ என கலங்கினர். அந்தப்பசு யாரையும் சட்டை செய்யாமல் சோழராஜனின் முன்னால் வந்து நின்றது.ராஜனும், அவன் தேவியும் கலங்கி விட்டார்கள். தங்கள் அன்புக்குரிய பசு, எங்காவது விழுந்து அடிபட்டு விட்டதோ! ஒருவேளை, பால் கொடுக்காத ஆத்திரத்தில் பசு மேய்க்கும் கோபாலன் அதை அடித்ததில் ரத்தம் வழிகிறதோ! இப்படி, பல்வேறு விதமான சிந்தனைகளுடன் பசுவின் உடலை அவர்களே கழுவினர். அது ரத்தக்கறை என்பதும், பசுவின் உடலில் இருந்து வழியவில்லை என்பதும் புரிந்தது. இருப்பினும், குழப்பம் தீராத அவர்கள், பசு மேய்ந்த இடத்துக்கே அவசரமாகத் தேரில் சென்றனர்.அங்கே, கோபாலன் மயங்கிக் கிடந்ததையும், திருநாமம் அணிந்த தபஸ்வி ஒருவர் ரத்தம் வழிய, வலி தாங்காமல் அரற்றிக் கொண்டிருந்ததையும் கண்டனர்.சுவாமி! நான் இந்நாட்டின் மன்னன் சோழராஜன். தாங்கள் யார்? தங்களுக்கு ஏன் இந்த அவலம் ஏற்பட்டது? எனக் கேட்க, ஸ்ரீமன் நாராயணன் கோபமாகப் பேசினார்.
மன்னா! உன் நாட்டில் பசுக்கள் பராமரிக்கப்படும் லட்சணம் இதுதானா? எந்த நாட்டில் பசுக்கள், பால் தந்தாலும், தராவிட்டாலும் புறக்கணிக்கப்படுகின்றனவோ அந்த நாட்டில் மழையே பெய்யாது. அங்கே வறுமை தாண்டவமாடும். சண்டையும் சச்சரவும் மிகுந்து உயிர்ப்பலி அதிகமாகும். எதிரிகள் அந்த நாட்டை வேட்டையாடுவார்கள். உன் நாட்டிலும், பசுக்களுக்கு பாதுகாப்பில்லை. இதோ! நான் தவமிருந்த இந்தப் புற்றுக்கு தினமும் வந்த ஒரு பசு, எனக்கு பாலைச் சொரிந்தது. ஒரு பசு ஒருவனுக்கு பால் கொடுப்பது உன் நாட்டில் பெரும் குற்றமா? அதற்காக, இந்த கோபாலன் அந்த மாட்டை அடிக்கப் பாய்ந்தானே? பசுக்களை அடிப்பது எவ்வளவு பெரிய பாவம்? பசுக்களை அடிக்கத் துணிபவன், அவற்றை மேய்ப்பதற்கே தகுதியற்றவ ஆயிற்றே! என்று கடிந்து கொண்டார். சோழராஜன், கோபாலன் செய்த தவறுக்காக அவரது பாதங்களில் விழுந்தான்.முட்டாளே! ஒரு வேலையில் தவறு நடந்தால் அதைச் செய்யும் சேவகனை விட, அவனை வேலைக்கு நியமித்தவனே பொறுப்பேற்க வேண்டும். அதிலும், பசுக்களை பராமரிக்க பொறுமை நிறைந்த ஒரு வேலைக்காரனைத் தேர்ந்தெடுக்காத நீ பிசாசாக மாறக் கடவாய், என சாபமிட்டார்.சோழராஜன் நடுநடுங்கி, சுவாமி! என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இருப்பினும், அறியாமல் நடந்து விட்ட இந்த தவறை மன்னித்து சாபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன், என மன்றாடினான்.அப்போது ஸ்ரீஹரி அவன் முன் சுயரூபம் காட்டி தரிசனம் தந்தார்.சோழராஜா! காரண காரியங் களுடனேயே எல்லாச் செயல்களும் நடக்கிறது. பசுக்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே, நான் இந்த லீலையை நிகழ்த்தினேன். என் சாபத்தை விலக்கிக் கொள்ள இயலாது. நீ சில காலம் பிசாசாக திரிந்து, அடுத்த பிறவியில் ஆகாசராஜன் என்ற பெயரில் பிறப்பாய். அப்பிறவியிலும் நீ மன்னனாகவே இருப்பாய். என் தேவி லட்சுமி, பத்மாவதி என்ற பெயரில் உனக்கு மகளாகக் கிடைப்பாள். அவளை எனக்கு மணம் முடித்து வைப்பாய், என்று அருள்பாலித்தார்.
ஸ்ரீமன் நாராயணா! பத்மநாபா! புண்டரீகாக்ஷõ! மதுசூதனா! கோபாலா! உன் தரிசனம் கிடைத்ததே போதும், இனி பேயாய் அலைந்தாலும் உன் நினைவுடனேயே திரிவேன், என்ற சோழராஜன் பேய் வடிவம் அடைந்து அங்கிருந்து அகன்றான்.இதன் பிறகு, மயக்கமடைந்து கிடந்த கோபாலன் எழுந்தான். அவன் தன் முன்னால் நாராயணன் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டு, ஹரிஹரி... ஹரி ஹரி... என்று சொல்லி வணங்கினான்.தெய்வமே! நான் செய்த மாபெரும் தவறுக்காக என்னை நரகத்துக்கு அனுப்பினாலும் அந்த தண்டனையை உளமாற ஏற்கிறேன். நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்தினர். படிப்பு எங்களுக்கு இல்லை. ராணியார் கொடுத்த நெருக்கடியால், இந்தத் தவறைச் செய்யும்படி ஆயிற்று. இருப்பினும், பசு ஏன் பாலைச் சொரிகிறது என்று நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நீ தரும் தண்டனையை நான் ஏற்கிறேன், என்றான்.நாராயணன் சிரித்தார்.கோபாலா! இந்த பூலோகத்துக்கு நான் வந்து, இந்த மரப்புற்றில் தங்கினேன். எல்லோரும் என்னை பல்வேறு விதங்களில் வழிபடுவார்கள். நீ அடித்து வழிபட்டாய். பசு மேய்ப்பவர்கள் எனது பக்தர்கள். ராணியின் நிர்ப்பந்தம் காரணமாகவே நீ பசுவை அடிக்கப் பாய்ந்தாய். அதனால், தவறு உன் மீதல்ல. மேலும், பூலோகம் வந்த என்னை முதன்முதலாகத் தரிசித்தவனும் நீ தான்!எனவே, ஒரு சிறப்பான வாய்ப்பைத் தரப்போகிறேன். நான் இந்த வேங்கடமலையில் ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். என் கோயில் திறந்ததும், முதல் தரிசனம் உனது வம்சத்தவர்களுக்கே தருவேன், என்று அருள் செய்து மறைந்தார்.இப்போதும், திருப்பதி கோயிலில் கோபாலனின் வம்சத்தினரே, அதிகாலையில் முதல் தரிசனம் பெறுகிறார்கள். அடுத்து, ஸ்ரீனிவாசன் மானிட வடிவில், தான் அந்த மலையில் தங்குவதற்குரிய வேறு இடத்தைத் தேடி புறப்பட்டார்.