பதிவு செய்த நாள்
03
மார்
2022
11:03
மனிதனை அதிகமாக ஆட்டிப்படைப்பது மரணபயம் என்றால் மிகையாகாது. மனிதனுக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் காரணம் பயமே என்கின்றனர் உளவியலாளர்கள். பாம்புக்கடியால் உடனடி மரணம் நிகழ்வதற்கு கூட அதீத பயமே காரணம் என்பர். இப்படிப்பட்டவர்கள் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு அருள் புரியும் வாஞ்சிநாதேஸ்வரர், எமதர்மனை தரிசித்தால் மனதில் துணிச்சல் பிறக்கும்.
‘எத்தனையோ பதவிகள் இருக்க தனக்கு மட்டும் உயிரை பறிக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளாரே’ என வருந்தினார் எமதர்மன். ‘ ஸ்ரீவாஞ்சியத்தில் தவமிருந்தால் சிவனருளால் உன் வருத்தம் தீரும்’ என அசரீரி ஒலித்தது. தவமிருந்த அவருக்கு மாசிமாத பரணி நட்சத்திரத்தன்று காட்சியளித்து, ‘‘ வரும் காலத்தில், ஒருவரின் உயிர் போவதற்கு நோய், முதுமை, விபத்து என காரணம் சொல்வார்களே தவிர உன்னை பழிக்க மாட்டார்கள். பாவமும் சேராது. இங்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசிப்பர்’’ என வரம் அளித்தார். கைகளில் பாசக்கயிறு, கதாயுதம், சூலம் ஏந்தி இடக்காலை மடித்தும், வலதுகாலைத் தொங்கவிட்டும் அமர்ந்தபடி இருக்க அவர் அருகில் சித்ரகுப்தன் உள்ளார். எமதர்மனுக்கு வடை மாலையும், ஆயுள் ஹோமமும் நடத்துகின்றனர்.
மூலவரான வாஞ்சிநாதேஸ்வரர் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனை மங்களநாயகி என அழைக்கின்றனர். 110 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரம் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். இத்தலத்திற்கு சென்றால் நுாறு முறை காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும். இங்குள்ள குப்தகங்கையில் கார்த்திகை மாத ஞாயிறன்று நீராடினால் பாவம் தீரும். மாசிமகத் திருவிழாவின் இரண்டாம் நாளில் மட்டும் வாஞ்சிநாதேஸ்வரர், எமதர்மனை ஒருசேர தரிசிக்கலாம்.
ஒருசமயத்தில் மகாவிஷ்ணுவை விட்டு மகாலட்சுமி பிரிந்திருந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு இங்கு சிவபெருமானை வழிபட்ட பின்னரே மகாலட்சுமியுடன் சேர்ந்தார். பைரவர், வெண்ணெய் விநாயகர், முருகன், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகள் உள்ளன. கிரகணத்தின் போது மூலவருக்கு கிரகண அபிேஷகம் நடக்கிறது. தினமும் திருவாஞ்சியம் என மூன்று முறை சொன்னால் நம் பாவம் குறையும்.
செல்வது எப்படி?
* திருவாரூரில் இருந்து 15 கி.மீ.,
* கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மதியம் 3:00 – 8:00மணி