பதிவு செய்த நாள்
03
மார்
2022
11:03
சைவமும், தமிழும் ஒரே சேரத் திகழும் சிவத்தலம் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார். இங்கு குடியிருக்கும் கைலாசநாதரை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும். இக்கோயிலில் சிவனடியார்களின் முயற்சியால் மார்ச் 6ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர் மலையத்துவஜ பாண்டியன் குழந்தை வரம் வேண்டி கயிலாய யாத்திரை புறப்பட்டார். இத்தலத்தை அடைந்த போது ‛மனமே கயிலாயம்’ என வானில் அசரீரி கேட்க, மன்னருக்கு கயிலாயத்தை தரிசித்த மனநிறைவு கிடைத்தது. அதனடிப்படையில் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி கைலாசநாதர் என்றும், அம்மன் ஆவுடையநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மன்னரின் மனைவியான காஞ்சனமாலையால் கைலாசநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மீனாட்சியம்மனின் பக்தரும், சவுந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தை தமிழில் பாடியவருமான வேம்பத்துார் வீரகவிராஜ பண்டிதர், காசி யாத்திரை சென்ற போது மதுரை மீனாட்சியம்மனே மகள் வடிவில் அவருடன் சென்றதாக திருநெல்வேலி காந்திமதி பிள்ளைதமிழ் குறிப்பிடுகிறது. 1945ல் பிரவலுார் சின்னக்கருப்ப மேஸ்திரியின் மனைவி ஒய்யம்மாள் இக்கோயிலின் கும்பாபிேஷகத்தை நடத்தினார்.
வேம்பற்றுார் என்னும் இந்த ஊரின் பெயர் தற்போது வேம்பத்துார் எனப்படுகிறது. கைலாச நாதர் கிழக்கு நோக்கியும், ஆவுடையநாயகி தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர். வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட கிரகதோஷம் விலகும். அவ்வையார், கம்பர், காளமேகப்புலவர், ஒட்டக்கூத்தர், கபிலர் ஆகியோர் இக்கோயிலில் உள்ள புதன் பகவானை வழிபட்டு கவிபாடும் ஆற்றல் பெற்றனர். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் புதனை வழிபட்டால் கல்வியில் வளர்ச்சி, கவித்துவம் உண்டாகும். இங்குள்ள பிரம்மாவை தரிசிக்க முற்பிறவியில் செய்த தீவினை மறையும். இந்திரமயிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு பால் அபிேஷகம் செய்து வழிபட நீண்டநாள் நோய் கூட பறந்தோடும்.
செல்வது எப்படி
மதுரையில் இருந்து (ராமேஸ்வரம் ரோடு) திருப்பாச்சேத்தி வழியாக 42 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி