பதிவு செய்த நாள்
07
ஜன
2011
02:01
அந்தப் பெண் இப்படி பதறிப் போவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில். கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் யசோதையாக அவதரித்து, கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றவள். அவனைப் பெற்ற தாய் தேவகிக்கு கூட அவனது பாலப் பருவத்தைக் கண்டு ரசிக்க கொடுத்து வைக்காமல் சிறையில் அடைபட்டுத் தவித்தாள். ஆனால், வளர்த்தவளுக்கு அத்தகைய கிருபையைச் செய்தார் நாராயணன். அவள் தான் இந்தப் பிறவியில் இந்தத் தாயாகப் பிறந்திருக்கிறாள். இவளது பெயர் வகுளாதேவி.இவன் கோகுலத்தில் யசோதையிடம் வளரும் போது, செய்யாத சேஷ்டைகள் இல்லை. தெருவில் போகும் சண்டையை வீட்டுக்குள் இழுத்து வந்து விடுவான். கோபியரிடம் வம்பு செய்வான். பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால், பால பருவத்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்த யசோதைக்கு அந்த திருமணங்களில் ஒன்றைக் கூட பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருநாள், கண்ணனைப் பார்க்கின்ற வாய்ப்பு யசோதைக்கு கிடைத்தது.கண்ணா! சிறுவயதில் நீ என் வீட்டில் வளர்ந்தாய். அதன்பின் மதுராபுரி, துவாரகை, அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் என சுற்றிக் கொண்டிருக்கிறாய். உன் பால பருவ லீலையைப் பார்த்த எனக்கு, பல கல்யாணங்கள் செய்தும் அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு திருமணத்தையாவது காணும் பாக்கியத்தைத் தரமாட்டாயா? எனக்கேட்டாள்.பகவான் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் தருவான். எதை எப்போது தர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால், எதிர்பார்த்து சென்றால் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்காக, சில யுகங்கள் வரை கூட காக்க வைத்து விடுகிறான். அந்த நிலை யசோதைக்கே வந்திருக்கிறது என்றால், சாதாரண பிறவிகளான நம் நிலையைக் கேட்கவா வேண்டும்? பெற்ற தாயான தேவகிக்கும், தந்தை வசுதேவருக்குமே தனது குழந்தைப் பருவ லீலைகளைக் காட்ட மறுத்த மாயாவி ஆயிற்றே அவன்.
இப்போது தன் திருமணத்தை தன் தாய்க்கு காட்டுவதற்கான நேரம் வந்திருக்கிறது. லட்சுமியை கோபப்பட வைத்து, அவளை பூலோகத்துக்கு அனுப்பிவிட்டு, அறியாப்பிள்ளை போல அவரும் பின்னால் வந்து விட்டார். ஆண்டவனிடம் நாம் வைக்கும் கோரிக்கைகள் வீண்போவதில்லை. பெரும் தாமதமாகுமே தவிர, நிச்சயம் கேட்டதைத் தருவான். நமது பொறுமையின் அளவு எவ்வளவு என்பதைச் சோதித்துப் பார்ப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்! பொறுமை பெருமை தரும் என்பது இதனால் தான்!பின்னர் வகுளாதேவி, சீனிவாசனை அழைத்து கொண்டு, அந்த மலையின் அதிபதியான வராஹ சுவாமியிடம் சென்றாள். அவரது ஆஸ்ரமத்தில் தான் வகுளாதேவி சேவை செய்து கொண்டிருந்தாள். இவர் யார் என்பது ஒரு கதை.பெருமாள் தசாவதாரம் எடுத்தாரே! அதில் பன்றியின் முகம் கொண்ட வராஹ அவ தாரமும் ஒன்று. பன்றியை வராஹம் என்பர். அவர் இந்த அவதாரம் எடுக்க என்ன காரணம் தெரியுமா?ஜெயவிஜயர் என்னும் வைகுண்டத்தின் பாதுகாவலர்கள் சனக, சனகாதி முனிவர்கள் வைகுண்டம் வந்த போது அவர்களைத் தடுத்து பின் னோக்கி தள்ளினர். தங்கள் தவவலிமையை மதிக்காத அவர்களை ராட்சஷர்களாக பிறக்கும்படி முனிவர்கள் சபித்தனர். அவர்கள் தங்களை மன்னிக்குமாறு வேண்டவே, மூன்று பிறவிகள் மட்டும் மகாவிஷ்ணுவுக்கு எதிரிகளாக இருந்து மீண்டும் வைகுண்டம் சேர வரமளித்தனர். அதன்படி அவர்கள் இரண்யகசிபுவாகவும், இரண்யாட்சனாகவும் பூலோகத் தில் ஒரு பிறவியை எடுத்தனர். இரணியன், மகாவிஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தால் மரணமடைந்தான். இரண்யாட்சன், பூமியைப் பாய்போல் சுருட்டி பாதாளத்துக்குள் ஒளித்து வைத்தான்.
தேவர்கள் இதுபற்றி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.அவர் வராஹ அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி உள்ளே சென்று இரண்யாட்சனை அழித்தார். பூமியை மீட்டு வந்தார். இதனால் தேவர்கள் அவரை பூவராஹசுவாமி எனப் புகழ்ந்தனர். அவர் தன் அவதாரத்துக்குப் பிறகு, திருமலையில் தங்கி விட்டார். (திருப்பதியில்வெங்கடாசலபதி கோயில்புஷ்கரணி (தெப்பக்குளம்) கரையில் அவரது கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது).சீனிவாசனைப் பார்த்ததும், வராஹசுவாமி தன்னிலை மறக்காமல், அவரும் தானும் ஒன்றே என்பதை அறிந்தார். இருப்பினும், அதை பூலோகத்தார் கண் களுக்கு காட்டாமல், ஏதும் அறியாதவர் போல், அவர் யார், என்ன விபரமென விசாரித்தார்.சீனிவாசன் அவரிடம்,ஐயனே! நான் இத்தலத்தில் வசிக்க வேண்டும் என வந்திருக்கிறேன். தாங்கள் இடம் கொடுத்தால் இங்கேயே கோயில் கொள்வேன், என்றார்.அதற்கு வராஹசுவாமி, சீனிவாசா! உனக்கு என்ஆஸ்ரமத்தின் அருகிலுள்ள இடத்தையே தருகிறேன். ஆனால், நீ அதற்கு வாடகை தர வேண்டும், என்றார்.சீனிவாசன் அவரிடம், சுவாமி! என் கதையைக் கேளுங்கள். என் மனைவி லட்சுமி என்னிடம் இருந்த வரை நான் செல்வந்தன். இப்போது அவள் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். பணம் நிலையாதது என்பது தாங்கள் அறியாததல்ல. இந்த நிமிடம் வரை பணத்தில் புரள்பவன், ஏதோ ஒரு அதிர்ச்சி தகவலால் மறுநிமிடமே ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். பணத்தின் தன்மை அத்தகையது. லட்சுமி என்னிடம் இல்லாததால், என்னிடம் அறவே பணமில்லை. என்னால் வாடகையோ, இடத்திற்கு விலையோ தர இயலாது. ஆனால், ஒரு சகாயம் மட்டும் என்னால் செய்ய இயலும், என்றார்.அது என்ன? என்று கேட்டார் வராஹசுவாமி.