பதிவு செய்த நாள்
23
மார்
2022
11:03
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்லாயிரம் மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு பூக்குழி இறங்குவர் .இந்த விழாவானது கடந்த மார்ச் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடியிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்புக்கட்டி 15நாள் விரதத்தை தொடங்கினர். அன்றிரவு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர வளமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் நகரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேர்த்திக்கடனாக பக்தர்கள் பால்குடம், சந்தன குடம் மற்றும் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினார். அன்று அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. நேற்று அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், அங்கப்பிரதட்சணம், பறவைக் காவடி போன்ற பல்வேறு நேர்த்திக் கடனை செலுத்தினர். பூக்குழி தளத்தில் காய்ந்த வேம்பு கட்டைகளையும், உப்பு மிளகு பொட்டலங்களையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் துணியில் பூஜை பொருட்களை எடுத்து வந்து, அம்மன் குளத்தில் நீராடி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோயில் முன்பாக உயரமான கழுகு மரம் ஊன்றப்பட்டது. அதன்பிறகு கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பெண்களும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் மாலை தொடங்கி இரவு வரையிலும் இறங்கினர். தொடர்ந்து இரவு கோயிலில் இருந்து கம்பம் அம்மன் குளம் போய் சேர்க்கப்பட்டது. இதில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று புதன்கிழமை காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் வந்து கோயிலை சென்றடையும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளும், திருக் கோவில் பூசாரி வகையறாக்களும், விழாக் குழுவினரும் செய்திருந்தனர். மேலும் பொது சுகாதாரப் பணிகள் குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா மேற்பார்வையில் செயல்அலுவலர் சரவணகுமார் துப்புரவு ஆய்வாளர் செல்வி மேரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் செய்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், மேலூர் மற்றும் நத்தம் பகுதியில் இருந்து கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.