கூடலூர்: முதுமலை, மசினகுடி ஆனைககட்டி ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யன் கோவில் திருவிழா 17ம் தேதி சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு குண்டத்திற்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு ஸ்ரீ சிறியூர் மாரியம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சியும்; 3:00 மணிக்கு ஸ்ரீ கொங்காளி அய்யனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு முடி எடுத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு அய்யன் புலிமேல் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை சிறப்பு பூஜைகளையும் தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.