சோமலிங்கசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு தடை: யானை நடமாட்டம் எதிரொலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2022 04:04
கன்னிவாடி: யானை நடமாட்டம் எதிரொலியாக கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக கன்னிவாடி மலை அடிவாரப் பகுதிகளில் யானை நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது கடந்த வாரத்தில் பண்ணைப்பட்டி அருகே, வேட்டை தடுப்பு காவலர் சுந்தரமூர்த்தி 51, யானை தாக்கி பலியானார். இப்பிரச்னையால் சோமலிங்கபுரம் வனப்பகுதி மலைக்குன்றில் உள்ள, சோமலிங்க சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வனத்துறை அறிவுறுத்தலின் பேரில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் விளைநிலங்கள் உள்ள விவசாயிகள் மட்டும் வனத்துறை அனுமதியுடன், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சென்று வருகின்றனர். சோமலிங்க சுவாமி கோயில் நிர்வாகி ஆண்டவர் கூறுகையில், வனத்துறை, போலீஸ் அறிவுறுத்தலின்படி, பக்தர்களுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகம பூஜை நேரங்களில் மட்டும் மிகுந்த கண்காணிப்புடன் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. யானை நடமாட்டம் குறைந்த பின், சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதி பெற்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என்றார்.