பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
06:04
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்துாரில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி முன்பு நிறைய பாம்புப் புற்றுகள் இருந்ததாகவும், அதனாலேயே இந்தப் பகுதி புற்றுார் என அழைக்கப்பட்டு, நாளடைவில் புத்துார் என்றானதாகவும் சொல்வர். மன்னர்கள் போருக்குப் புறப்படும் முன் இங்கு சிறப்பு பூஜைகள் செய்வது அக்கால வழக்கம். கிழக்கு நோக்கிய இக்கோயிலில் அழகிய முகப்பு மண்டபத்தைக் கடந்ததும் மகா மண்டபம் உள்ளது. அதை அடுத்துள்ள கருவறையில் அன்னை திரவுபதி அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.
இடதுபுறம் அனுமன், சிவன், முருகர், சத்திய நாராயணர், விஷ்ணு துர்கை சன்னதிகளும், வலதுபுறம் தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி, கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன.
கருவறையின் இடதுபுறம் தனி சன்னிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்புரிகிறார். அன்னையின் கருவறை முகப்பில் கற்பக விநாயகர். பால முருகன் உள்ளனர். மகாமண்டப வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். பிரகாரத்தில் காலபைரவர் இருக்கிறார். அரசு, வேம்பு, வன்னி ஆகியவை தல விருட்சமாக உள்ளன.
தை மாத வெள்ளியன்று திரவுபதி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். சித்திரை மாத பவுர்ணமியில் பாற்குட ஊர்வலம் நடக்கிறது. ஆடி வெள்ளியன்று கூழ் வார்க்கும் திருவிழாவும், நவராத்திரி விழாவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. கன்னி பெண்கள் இங்கு வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும்.