பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை நடந்தது.
இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண்ணாசையால் சாபம் பெற்றார். கொன்றை வனத்தில் பைரவர் முன் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இதை நினைவு கூறும் வகையில் பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையையொட்டி இன்று காலை 10:00 மணிக்கு பி.மதகுபட்டி கிராமத்தார்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பால்குட ஊர்வலத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார். வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.