பதிவு செய்த நாள்
02
மே
2022
01:05
* மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். இப்பிறவியில் செல்வ வளமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள்.
* லட்சுமிக்கு விருப்பமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
* நெல்லிமரத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
* தனக்கு நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காகஆதிசங்கரர் ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடினார். மகாலட்சுமி அருளால் பொன்னும் பொருளும் கிடைத்தது.
மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமையில் வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.
* லட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.
* வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
* மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வாமனபுராணம் கூறுகிறது.
* பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்தபின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும். .
* லட்சுமியின் அம்சமான துளசி செடியை மாடம் வைத்து, அதை தினமும் சுற்றி வந்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
* வாழை, மாவிலை, எலுமிச்சம்பழங்களில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் சுபநிகழ்ச்சிகளில் இவற்றை பயன்படுத்துகிறோம்.
* தலைமுடியின் முன் வகிட்டில் லட்சுமி இருப்பதால் மணமான பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வர்.
* தீபாவளியன்று அதிகாலை வேளையில் (5:00 – 5:30மணி) மகாலட்சுமி நல்லெண்ணெய்யில் வாசம் செய்கிறாள்.
* யானை, குதிரையின் முகத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள்.
* வைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ‘ஸ்ரீஸ்துதி’ என்னும் ஸ்தோத்திரத்தில் மகாலட்சுமியை ‘மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள்’ என புகழ்கிறார்.
* மகாவிஷ்ணுவின் அருள் பெற வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
* எப்போதும் பிரியாமல் மகாவிஷ்ணுவுடன் சேர்ந்தே இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே சிறந்தது.
* ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியவள் மகாலட்சுமி.
* மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கைகள் இருக்கும். ஆனால் தனியாக சன்னதியில் நான்கு கைகள் கொண்டிருப்பாள். முன்னிரு கைகள் அபயம், வரத நிலையிலும், பின் இரண்டு கைகளில் தாமரைப்பூவும் ஏந்தி இருப்பாள்.
* மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்காததால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.
* லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவரும் செம்பொன் நிறம் கொண்டவர்கள்.
* மகாலட்சுமியின் அருளைப் பெற உகந்த கிழமை வெள்ளி. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே இந்நாளில் சூரிய உதயமானதும் லட்சுமியை பூஜிப்பது சிறப்பு.
* ஸ்ரீசூக்தம், ஸ்ரீஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் ஆகியவை லட்சுமியின் பெருமையை போற்றுகின்றன.
* வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் ஏற்படும்.
* தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
* மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி மீ்ண்டும் சேர்ந்த தலம் ஸ்ரீவாஞ்சியம்.
* பிரம்மா புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை பூஜிக்கிறார்.
* மகாலட்சுமியை பூஜித்த இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யம், ஐராவதம் என்னும் யானை, அமராவதி பட்டணத்தை பெற்றார்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி தங்கியிருக்கிறாள்.
* வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாக லட்சுமியாக மகாலட்சுமி இருக்கிறாள்.
* கோயில்களில் மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்பவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
* லட்சுமி மாதுளம்பழத்தில் இருந்து தோன்றியதால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ‘ஸ்ரீ’ என்றும் போற்றப்படுகிறாள்.
* பல்லவர் கால சிற்பங்களில் கஜலட்சுமியை காணலாம். கஜலட்சுமியின் இரண்டு உருவங்கள் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் உள்ளன.
* துாத்துக்குடி மாவட்டம் திருக்குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
* மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது, ஆந்தையை அவளது வாகனமாக வழிபடுவது வழக்கம்.
* மகாராஷ்டிராவில் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக விவசாயிகள் கருதுகிறார்கள்.
* குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
* ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக கருதுகின்றனர். தானியம் அளக்கும் ‘காரி’ என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து வழிபடுகின்றனர்.
* வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
* லட்சுமியை வழிபட்டால் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், புகழ் உண்டாகும்.
* எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் மகாலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கின்றனர்.
* மகாலட்சுமிக்கு உகந்தது நெய் தீபம். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
* லட்சுமியின் அம்சமான நீரும், உப்பும் வீட்டில் குறைவின்றி இருக்க வேண்டும்.
* நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி செல்வத்தை வழங்குகிறாள்.
* மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
* அனைவருக்கும் நன்மை தருபவள் என்று மகாலட்சுமி குறித்து அதர்வண வேதம் சொல்கிறது.
மகாலட்சுமிக்கு அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
* லட்சுமி பூஜையில் அருகம்புல்லை துாவி வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
* சந்தனத்தில் லட்சுமி செய்து பூஜை செய்யலாம். அதை மறுநாள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
* அட்சய திரிதியை நாளில் புனித நதிகளில் நீராடினால் ஓராண்டு மகாலட்சுமியை பூஜித்த புண்ணியம் கிடைக்கும்.
* சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
* மன்னர் விக்ரமாதித்தன் மகாலட்சுமி அருளால் இழந்த நாட்டை மீண்டும் அடைந்தார்.