பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமிகோவில் ஆண்டு வருமானம் இரண்டு கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தை, உதவி ஆணையர் நிலைக்கு மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.திருப்போரூரில் மிகவும் பிரசித்திபெற்ற, பிரார்த்தனை தலமாக கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு சொந்தமாக 600 ஏக்கர் விவசாய நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் உள்ளன.கடந்த 2000ம் ஆண்டில், கோவில் வருமானம் 50 லட்ச ரூபாயாக இருந்தது. மாநகரப் பேருந்து வசதி, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை மேம்பாடு, போன்றவறறின் காரணமாக, கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவிலுக்கு உண்டியல்கள் மூலம், ஆண்டுக்கு 1.3 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. தலை முடி ஏலம் இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து 33 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.பிரசாதக் கடை ஏல வருமானம் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அன்னதான திட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள உண்டியல் மூலம், சராசரியாக மாதம் 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. கோவிலில் மொட்டை அடித்தல், டிக்கெட், அர்ச்சனை டிக்கெட், திருமணம், துலாபாரம், காது குத்தல், வாகன நிறுத்தம், போன்றவற்றின் மூலம் 20 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.இந்த வகையில், ஆண்டு சராசரி வருமானம் இரண்டு கோடியை தாண்டியுள்ளது. வருமானம் இரண்டு கோடி ரூபாயை எட்டிவிட்டதால், கோவிலை செயல் அலுவலர் நிலையிலிருந்து, உதவி ஆணையர் நிலைக்கு மாற்றம் செய்வதுடன், பணியாளர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.