மத்தியப் பிரதேசத்தில் அசிர்கர் கோட்டை, சாத்புரா மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டைக்குள் இருக்கும் சிவன் கோயிலுக்கும் அஸ்வத்தாமனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான கோயில் இது. கண்ணனின் சாபத்தைப் பெற்ற பின் அஸ்வத்தாமன் இங்குள்ள சிவனை தினமும் வழிபடுகிறார். இன்றும் கூட காலையில் கருவறையைத் திறக்கும் போது அஸ்வத்தாமனால் பூஜித்த பூக்கள், சந்தனம் சிவலிங்கத்தை அலங்கரித்தபடி இருக்கும். இரவில் அஸ்வத்தாமனின் நடமாட்டம் கோட்டைக்குள் இருக்கிறது என்றும், யாராவது கண்ணில் தென்பட்டால் தன் நெற்றியில் உள்ள காயம் ஆற மஞ்சள், எண்ணெய் கேட்பதாகவும் கூறுகிறார்கள். அவனைப் பார்த்தவர்களுக்கு புத்தி பேதலிக்கும் என்றும் சொல்கின்றனர். உள்ளூர் மக்கள் இரவில் கோட்டைப் பக்கம் வர அஞ்சுகின்றனர்.