குடம் குடமாக பானகத்தை வாயில் ஊற்றினாலும் அப்படியே குடித்து விடும் நரசிம்மர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகிலுள்ள மங்களகிரி மலையில் குடியிருக்கிறார். பானக நரசிம்மர் எனப்படும் இவரை சுவாதி நட்சத்திரத்தன்று தரிசிப்பது விசேஷம். நமுச்சி என்னும் அசுரன் தவத்தில் ஈடுபட்டு பிரம்மாவிடம் வரம் பெற்றான். அதன்படி ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் அவனுக்கு அழிவு உண்டாகாது. இதன் காரணமாக ஆணவத்தால் தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். தேவர்களின் தலைவனான இந்திரன் விஷ்ணுவைச் சரணடைய, அவர் சக்கராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டு ஈரமானது போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது. அது சீறிப் பாய்ந்து அசுரனின் தலையை அறுத்தது. நமுச்சியைக் கொன்ற பிறகும் விஷ்ணுவின் உக்கிரம் தணியவில்லை. அதன்பின் அமிர்தத்தை குடித்து அமைதியடைந்தார். அப்போது அவரிடம் இருந்த புறப்பட்ட உக்கிரசக்தி இந்த மலையை அடைய, இங்கு நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வெல்லம், எலுமிச்சை கலந்த பானகத்தை தினமும் படைக்கின்றனர்.
நரசிம்மர் அகன்ற பித்தளை வாயுடன் இருக்கிறார். பெரிய பாத்திரங்களில் பானகம் தயாரித்து, அவரின் வாயில் அர்ச்சகர் ஊற்றியதும், ‘மடக் மடக்’ என்னும் சப்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும், மிடறல் சத்தம் நின்று விடும். மீதியுள்ள பானகத்தை பிரசாதமாக வழங்குகின்றனர்.
ஆஞ்சநேயரின் வழிகாட்டுதலின்படி ராமர் இங்கு நரசிம்மரை வழிபட்டார். கோயிலின் பின்புறம் லட்சுமி தாயார் சன்னதி உள்ளது. நரசிம்மர் சன்னதிக்கு வெளியே உள்ள குகையில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. இந்த குகைப்பாதை உண்டவல்லி என்னும் இடத்தை சென்றடைகிறது. அங்கு 25 அடி நீளமுள்ள ரங்கநாதர் பள்ளி கொண்டநிலையில் இருக்கிறார். பாதுகாப்பு கருதி குகை வாசல் மூடப்பட்டுள்ளது. முற்காலத்தில் இக்குகையில் துறவிகள் வாழ்ந்துள்ளனர்.
மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. 11நிலை கொண்ட 153 அடி உயர கோபுரம் இங்குள்ளது. அடிவார நரசிம்மர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிந்த இவர் பட்டு பீதாம்பரதாரியாக இருக்கிறார். அருகில் ராஜ்ய லட்சுமி தாயார் சன்னதி உள்ளது.
எப்படி செல்வது: விஜயவாடா – குண்டூர் ரோட்டில் 12 கி.மீ.,