இன்று மும்மூர்த்திகளின் சொரூபம் .. தத்தாத்ரேயர் ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2022 01:05
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபம், தத்தாத்ரேயர். ‘தத்தகுரு’ எனப்படும் இவரை அனுசூயா - அத்ரி மகரிஷி தம்பதிகளின் புத்திரனாக புராணங்கள் கூறுகின்றன. அவதூத ஆஸ்ரமத்தைத் துவக்கி வைத்தவர் இவரே! இவர்கள் திகம்பரர்களாகவே இருப்பர். சதாசிவ பிரம்மேந்திராள், புதுக்கோட்டை சாந்தானந்தர், ஜட்ஜ் சுவாமிகள் போன்றோர் இந்த ஆஸ்ரமப்படி சன்னியாசம் பெற்றவர்கள். கார்த்த வீர்யார்ஜுனன், பரசுராமன் ஆகியோர் தத்தாத்ரேயரின் சீடர்கள். தத்தரை வழிபடும் தலங்களில் கார்த்தவீர்யார்ஜுனரையும் வழிபடும் மரபு உண்டு. மைசூரில் உள்ள தத்தாத்ரேயர் கோயில் புகழ் பெற்றது. தஞ்சை வடகுடியில் தத்தருக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் கோயில் உள்ளது. கார்த்தவீர்யார்ஜுன பூஜை ஹோமப் பிரயோகங்களில் முதலில் அனுசூயா தேவிக்கு ஓர் ஆகுதியும், தொடர்ந்து தத்தகுருவின் அஷ்டாட்சரத்தினால் பதினொரு ஆகுதியும் கொடுத்த பின்பே ஹோமம் செய்யப்பட வேண்டும்.
மகாசிரஞ்சீவிகளுள் தத்தாத்ரேயரும் ஒருவர் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர் ஆகியோரைப் போன்று தத்தரும் குரு பரம்பரையைத் தோற்றுவித்தவர். பழநி குமரலிங்கத்தில் தத்தகுருவுக்கு ‘லிங்க சன்னதி’ ஒன்று உண்டு. இவரை வழிபடுவதால் அபார ஆற்றல் கிடைக்கும். இவர் ‘தத்தகல்பம்’ எனும் நூலை எழுதியுள்ளார். பரசுராம கல்ப பூஜைகளும் இவரைத் தழுவியே உள்ளன. வேத பதங்களினால் செய்யப்பட்ட ‘வேத பாதஸ்தவம்’ ஒன்று இவருக்கு உண்டு. அனுமனும், தத்தரும் யோகிகளுக்குக் காட்சி தருவதுண்டு. வேதபாஷ்யங்களுக்கு விளக்கம் எழுதுபவர்கள் தத்தரின் ஒப்புதலைப் பெற்றே வெளியிடுவர். ஆதிசங்கரர் இவரைச் சந்தித்து தமது அத்வைத கருத்துகளுக்கு ஒப்புதல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.