பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
02:06
நத்தம், நத்தம் தெலுங்கர் தெருவில் உள்ள சாத்தவராயன் சுவாமி, பால கணபதி, காளியம்மன், பாலமுருகன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி ஜூன் 5 கணபதி வழிபாடு, முகூர்த்தக்கால் பூஜை, காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஜூன் 15 மங்கல இசை, கோமாதா பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி பூஜையை தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு பூஜை, நவசக்தி ஹோமம் உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடந்தது. நேற்று கணபதி வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. பின் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக் குடங்கள் யாகசாலையில் இருந்து பக்தர்கள் ஆரவாரத்துடன் கோவிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களில் இருந்த தீர்த்தம் கலசங்களில் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பின் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சுற்றளவுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறையினர் செய்திருந்தனர்.