சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் 272 புரவிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி ஜூன் 3ம் தேதி பிடிமண் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அரண்மனை புரவிகள் 2, நேர்த்திக்கடன் புரவிகள் 270 செய்யப்பட்டன. புரவிப் பொட்டலில் இருந்து ஜூன் 16ம் தேதி அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டு கொண்டுவரப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரியமான சாமி ஆட்டம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் புறப்பட்டது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவியும் நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் செகுட்டையனார் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். படைத்தலைவி அம்மன் கோயிலில் ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.