ஒருவருக்கு கிடைக்கும் புகழ் என்பது அவரைச் சார்ந்ததல்ல. அதை சிலர் கேட்டுப் பெறுகிறார்கள். அதனால், அவர்கள் மனதுக்கே திருப்தி இராது. உண்மையில், புகழ் என்பது ஆண்டவரால், ஒருவருக்கு வழங்கப்படுவது. நம் முயற்சிக்கு உறுதுணையாய் இருப்பவரும் அவரே.இர்வின் என்ற விண்வெளிவீரர் ஆண்டவர் மேல் அளவில்லாத பக்தியும் அன்பும் உடையவர். 1971ல், அப்பல்லோ 15 விண்கலத்தில் நிலாவுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பியதும், “சந்திரனில் இருந்து பூமியைப் பார்க்கும் போது பூமி மிகவும் சிறியதாய் தெரிந்தது. இந்த சின்னபூமியில் எவ்வளவோ தேசங்கள் இருக்கின்றன. அதில் என்னுடைய தேசம் எங்கிருக்கிறது? அங்கே என் வீடு அணுவிலும் அணுவாக எங்கோ ஒரு இடத்தில் புதைந்து கிடக்கிறது என்பதை உணர்ந்தேன். இப்படிப்பட்ட அணுவுக்குள் வாழும் என் மீது கர்த்தர் எந்தளவுக்கு இரக்கம் வைத்திருந்தால் இப்படி ஒரு உச்சமான வாழ்வை அடைந்திருப்பேன்? என் அணுவிற்கும் அணுவான வீட்டில் வாழும் கர்த்தர் என்மேல் எவ்வளவு அன்பு கூர்ந்திருந்தால் தானே இது சாத்தியம்! இப்படி ஒரு புகழைத் தந்த கர்த்தரை பரிபூரணமாய் நம்புவதிலும், அவரிடம் என்னை பூரணமாய் ஒப்புக்கொடுப்பதும் எனக்கு கிடைத்த பாக்கியம்? என்றார்.நமக்கு எத்தகைய வாழ்வை ஆண்டவர் கொடுத்திருந்தாலும் சரி...அதை முழுமனதுடன் ஏற்று அவரை விசுவாசிக்க வேண்டும். “ஆண்டவரே! என்னையும், என்னுடைய குடும்பத்தையும் முற்றிலுமாக உமது கரத்திலே ஒப்புக்கொடுக்கிறோம். நீரே எங்களை வழிநடத்தும். எங்களுடைய சித்தம் அல்ல. உம்முடைய சித்தமே எங்களிலே நிறைவேறட்டும், என்று ஜெபிக்க வேண்டும். நம்மை புகழேணியின் உச்சிக்கு அவர் அழைத்துச் சென்று விடுவார்.