பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
04:07
ஆர்.கே.பேட்டை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, மாவட்டத்தின் பல அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.கடந்த செவ்வாய்கிழமை அம்மனுக்கு கூழ்வார்த்து வழிபட்ட பெண்கள், நேற்று சேலை வைத்து வழிபட்டனர். ஆடி மாதத்தில் அம்மனுக்கு சேலை வைத்து வழிபாடு நடத்துவதை ஒட்டியே, ஜவுளிக்கடைகளில் ஆடி தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, பரணி காவடியும் கொண்டாடப்பட்டதால், நேற்று காலை 10:00 மணிக்கு முன்னதாக, அம்மனுக்கு சேலை வைத்து பெண்கள் வழிபட்டனர்.நாளை ஞாயிற்று கிழமை முதல், 10 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
திருத்தணி நகராட்சியில் உள்ள படவேட்டம்மன், தணிகாசலம்மன், வனதுர்க்கையம்மன், அங்காள பரமேஸ்வரி, தணிகை மீனாட்சி அம்மன் உட்பட பல அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.பெண் பக்தர்கள் கூழ்வார்த்தல், பொங்கலிட்டு அம்மனுக்கு வழிபாடு செய்தனர். இரவு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. பென்னலுார்பேட்டை கிராம பாளையத்தம்மன் கோவிலில், 108 பக்தர்கள் பால் குடம் ஏந்திச் சென்றனர்.கிராமத்தில் உள்ள சக்தி இருப்பிடத்தில் இருந்து, முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று முதல் வெள்ளிக்கிழமை என்பதால், ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், கச்சூர், பாலவாக்கம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள், கூட்டம் கூட்டமாக பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.கார், வேன் ஆகியவை வாகனங்களில் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.