பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
04:07
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி கிருத்திகை தினமான இன்று அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் வருகை தர துவங்கினர். இன்று அதிகாலை, 5:30 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு உச்சி காலை பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து, உற்சவமூர்த்திகளான, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரமாய் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆடி மாத கிருத்திகையையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்ல பஸ்சிற்காக, நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், மருதமலை களைகட்டியது.