ராபர்ட் என்னும் சிறுவன் தனது தங்கையுடன் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு கடையில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்றாள் தங்கை. அதை பார்த்தவன் அந்த பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்தான். பின் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடை முதலாளியிடம், ‘‘பொம்மை என்ன விலை’’ எனக் கேட்டான். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ‘‘உன்னிடம் எவ்வளவு உள்ளது’’ எனக் கேட்டார். அவன் உடனே தான் விளையாட வைத்திருந்த கடல் சிப்பிகளை எடுத்து, கவலையுடன் ‘இது போதுமா’ எனக் கேட்டான். அவரோ ஐந்து சிப்பிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் உள்ளதை அவனிடம் கொடுத்தார். மகிழ்ச்சியோடு கிளம்பினான் ராபர்ட். இதை கவனித்த பணியாளர், ‘‘உதவாத சிப்பிகளுக்கு, ஏன் விலை உயர்ந்த பொம்மையை கொடுத்தீர்கள்?’’ எனக்கேட்டான். ‘‘பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று அவனுக்கு புரியாது. அவனைப் பொருத்தவரை அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால், அவன் மனதில் பணம்தான் உயர்ந்தது என்று பதிவாகிவிடும். அவன் பின்னாளில் என் செயலை புரிந்து கொள்வான். பிறகு எல்லோருக்கும் உதவி செய்து உயர்ந்த மனிதனாக மாறுவான்’’ என்றார்.