பதிவு செய்த நாள்
05
செப்
2022
07:09
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு நேற்று நடந்தது. முன்னதாக பரம்பரை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கரந்த மலையில் புனித நீர் ஆடி , தீர்த்தங்கள் நிறைந்த குடங்களை எடுத்துக்கொண்டு நத்தம் மீனாட்சிபுரம் சந்தன கருப்புசாமி கோவிலுக்கு மேளதாளம் மற்றும் அதிர்வெட்டுகள் முழங்க வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து வெவ்வேறு குழுக்களாக 1000 முளைப்பாறியுடன் பெண்கள் மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக்கொண்டு யானை மற்றும் குதிரை ஆட்டத்துடன் ஊர்வலமாக நத்தம் மாரியம்மன் கோவில் வந்து சேர்ந்தனர். ஊர்வலத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, தர்மராஜன், மோகன், குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி உள்ளிட்டோர் மற்றும் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.