புதுச்சேரி:தானே புயலின் போது சேதமடைந்த கோவில் திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. பாக்கமுடையான்பேட்டில், பொய்யாக்குளம் எதிரில் ஆரணி பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், தானே புயலின் போது பலத்த சேதமடைந்தது. கோவில் மதில் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதையடுத்து கோவிலை புதுப்பிக்க ஊர் மக்கள் முடிவு செய்து தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்திடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆரணி பெரியபாளைத்தமன் கோவிலுக்கு திருப்பணி நடத்த நிதி பெற்று தந்தார்.இதையடுத்து கோவில் திருப்பணிக்கான அம்மன் பாலாலயம் விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் துரை ஜனார்த்தனன், துணைத் தலைவர் அனந்த சேகரன், செயலாளர் மோகன், பொருளாளர் நடராஜன், துணை செயலாளர் குணசேகரன் செய்திருந்தனர்.