பதிவு செய்த நாள்
24
ஆக
2012
10:08
நகரி: திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் பதவிக்கு, ஆந்திர காங்கிரஸ் எம்.பி.,க்களும், "மாஜி எம்.பி.,க்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். போட்டியில் யார் யார்?திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், தன்னாட்சி நிர்வாகமாக இயங்கி வருகிறது. இங்கு தலைவர் பதவி வகிப்பவர்களுக்கு, அனைத்து வசதிகள், சலுகைகள் கிடைக்கின்றன. தேவஸ்தான போர்டின் உறுப்பினர்களாக பதவிக்கு வருபவர்களுக்கும், அமைச்சர்களுக்கு வழங்கப்படும், கார் மற்றும் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.திருமலையில், சாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு, கோவிலில் தரிசன வசதி செய்து தரும் நேரங்களில், அவர்களின் அறிமுகம், அதன் மூலம் போர்டின் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு, அனைத்து முன்னுரிமையும் கிடைக்கின்றன. தலைவர் பதவியில் உள்ளவர்கள் தங்குவதற்கு, தேவஸ்தான விருந்தினர் மாளிகை ஒதுக்கப்படுகிறது.தலைவர் பதவி வகிப்பவரின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான நிர்வாக அதிகாரி, துணை நிர்வாக அதிகாரி உட்பட, தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் செயல்பட வேண்டியுள்ளது. பதவிக்காலம் முடிவுதற்போது, தேவஸ்தான தலைவராக இருந்து வரும் பாபிராஜுவின், தலைமையிலான போர்டின் பதவிக்காலம், வரும், 26ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு புதிய தலைவர் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. தேவஸ்தான தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு, ஆந்திராவை சேர்ந்த எம்.பி.,க்களும், "மாஜி எம்.பி.,க்களும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர் காங்கிரஸ் எம்.பி.,யான குண்டூர் ராயபாடி சாம்பசிவ ராவ், தற்போது இப்பதவியில் உள்ள நாகாபுரம் எம்.பி., பாபிராஜு, தொழிலதிபர் டி.சுப்பிராமி ரெட்டி, "மாஜி எம்.பி., கே.ஆதிகேசவலு நாயுடு ஆகிய நால்வரும், தலைவர் பதவிக்காக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தலைவர் பதவிக்கான, நியமன விவகாரம், பரிந்துரைகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா வரை சென்றுள்ளது. ஆந்திராவை சேர்ந்த, சில சீனியர் காங்கிரஸ் எம்.பி.,க்கள், மாநில முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும், மேலிடம் கருணை காட்டினால், நாமும் அந்த பதவிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்புடன், டில்லி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.