பதிவு செய்த நாள்
24
ஆக
2012
10:08
ஈரோடு: காஞ்சிபுரம் மாவட்டம், துரைப்பெரும்பாக்கத்தில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி சிலை வீதி உலா நேற்று ஈரோட்டில் நடந்தது.வைணவ சமயாச்சாரியார் பகவத் ராமானுஜரின், 1,000வது ஆண்டு வைபவம், 2017ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, ஏலகிரி மலை வரையில், ஒன்பது தனித்தனி இடத்தில் விஷ்ணுவின் ஒன்பது அவதாரக் கோவில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.ஏலகிரி தாயார் அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே, துரைப்பெரும்பாக்கத்தில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஸ்வாமி கோவில் அமைகிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, மூலவர் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் ஸ்ரீமத் ராமானுஜர் சிலை, தமிழகமெங்கும் திருவீதி உலாவாக எடுத்து வரப்படுகிறது.நேற்று காலை ஈரோடு, திண்டல் முருகன் கோவிலுக்கு வந்த ஸ்வாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் அக்ரஹார வீதி ராகவேந்திரர் கோவில் முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழு அடி உயரம், மூன்று டன் எடை கொண்ட லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் நான்கு அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்கினர்.லட்சுமி நரசிம்மர் பக்தர்கள் கூறியதாவது:இச்சிலைகள் வீதியுலா, மூன்று மாதத்துக்கு முன் நெல்லை மாவட்டம், நான்குநேரியில் துவங்கியது. இன்று (நேற்று) முதல், 25ம் தேதி வரை ஈரோட்டில் வீதி உலா நடக்கிறது. நாளை (இன்று) காலை, 6 மணிக்கு, கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவில், மாலை 5 மணிக்கு, சூரம்பட்டிவலசு சக்தி மாரியம்மன் கோவில் அருகில் திருவீதி உலா நடக்கிறது. 25ம் தேதி காலை, 6 மணிக்கு, வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவில் அருகிலும், மாலை 5 மணிக்கு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் வாயிலிலும் வீதி உலா நடக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.