பதிவு செய்த நாள்
31
அக்
2022
08:10
சென்னை:சென்னையில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழாவை ஒட்டி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களின் அரோகரா... முழக்கம் விண்ணை அதிரச் செய்தது.
தமிழகம் முழுதும் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் கோவில், பூக்கடை கந்தகோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில். குரோம்பேட்டை குமரக்குன்றம், சோழிங்கநல்லுார் முருகன் கோவில் உள்ளிட்டவற்றில் கந்தசஷ்டியை முன்னிட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து அந்த கோவில்களில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
வடபழநி கோவில்: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், மஹா கந்த சஷ்டி விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை லட்சார்ச்சனையும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று ஆயிரக்கணக்கானோர் உச்சிகால லட்சார்ச்சனையில் பங்கேற்றனர். இதையடுத்து, சுவாமிக்கு தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடந்தது. நேற்று இரவு 6:00 மணியளவில் அம்பாளிடம் வேல் பெற்று சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெற்கு கோபுர சந்திப்பில் முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம் உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்த போது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பக்தர்கள் வசதிக்காக சூரசம்ஹாரம் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, வள்ளி -- தெய்வானை சமேத சண்முக பெருமாள் மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 7:00 மணிக்கு வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
கந்தகோட்டம்: கந்தகோட்டம் என்றழைக்கப்படும், முத்துகுமாரசுவாமி கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு கந்தகோட்டம் கோவில் சார்பில், பாரிமுனை, தேவராஜ முதலி தெருவில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரனை சம்ஹாரம் செய்ய பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்துடன், இன்று கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது.
பெசன்ட் நக: பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவிலில், நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. காலை விசேஷ அலங்காரம், வேல் மாறல் பாராயணம் நடந்தது. மாலை, சூரசம்ஹார விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு, முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட மயில் வாகனம், திருமுருகன் தெரு, நவபாரத் காலனி, காவேரி தெரு மற்றும் கடற்கரை சாலை வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. இதில், தெரு முழுதும் திரளான பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு, தேவசேனை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டியின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்க கவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு வழக்கம்போல் லட்சார்ச்சனை விழா நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு, 1,500 கிலோ எடையில் பல்வேறு மலர்களால் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று, கந்தசஷ்டியின் நிறைவு நாள், வார விடுமுறை நாள் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். அதனால், பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் ஆறு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
கபாலீஸ்வரர் கோவில்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழாவில், சிங்கார வேலர் திருவீதியுலா காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் நடந்தது.இறுதி நாளான நேற்று காலை 7:45 மணிக்கு சிங்காரவேலரின் வீதியுலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடந்தது இரவு 7:30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து, சிங்காரவேலரின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சிங்காரவேலரின் ஏக தின லட்சார்ச்சனையும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. சென்னையில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா... முழக்கம் விண்ணை அதிர செய்தது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.