திருக்கடையூர் கோவிலில் சுவிட்சர்லாந்து தம்பதியினர் சதாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2022 02:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் (80 ஆம் திருமணம்) சதாபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். கோவிலுக்கு இன்று காலை சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் (82) அவரது மனைவி ஜானத்(79) வந்தனர். கோ பூஜை, கஜ பூஜை செய்த அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள பிச்சை கட்டளை மண்டபத்தில் ஆயுஷ் ஹோமம் செய்தனர். ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் கொண்டு தம்பதிகளுக்களுக்கு சதாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 80 வது திருமணம் வைபவம் தொடங்கியது புத்தாடை அணிந்து மணமக்கள் தங்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் பால் பழம் வழங்கும் பாரம்பரிய நிகழ்வுகளை தொடர்ந்து மணமக்களுக்கு ஆராத்தி எடுக்கப்பட்து. கோவிலுக்க வந்த பக்தர்கள் வெளிநாட்டு தம்பதியிடம் ஆசி பெற்று சென்றனர். தொடர்ந்து அவர்கள் சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.