சென்னை: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி கோவிலின் 40ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பிரமாண்ட கொடி அன்னையின் தேருடன் பெசன்ட் நகரில் மாதாவின் கொடி பவனி வந்து, மாலை 5:50 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட 75 அடி உயர வெண்கல கொடி மரத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றினார். உடன் கோவில் பங்கு தந்தை பிரான்சிஸ் மைக்கேல் இருந்தார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சிறப்பு திருபலி நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவையொட்டி பெசன்ட் நகரில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று முதல் துறவற சபைகள் விழா, நோயுற்றோர் நலம்பெறும் விழா, நற்கருணை விழா, உழைப்பாளர்கள் விழா இளைஞர்கள், ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா ஆகியவை நடக்கிறது. வரும் ஏழாம் தேதி ஆரோக்கிய அன்னையின் தேர் திருவிழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் மலையப்பன் சின்னப்பா கலந்து கொள்கிறார்.