பதிவு செய்த நாள்
23
டிச
2022
07:12
திருவாரூர்: ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தானத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஸ்ரீ சேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரீ சித்திரை கூட சேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த தேவஸ்தானத்தில் இன்று 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு தொடங்கி விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு 200 லிட்டர் பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் வாசனை திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீப ஆராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அபிஷேக, ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஹனுமன் ஜெயந்தியான நாளான இன்று காலை 10 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சீதா கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். திருக்கல்யாணத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற வேண்டும் எனவும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு திருமாங்கல்யச் சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகியன அருட்பிரசாதமாக வழங்கப்பட உள்ளன என்று ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ காரியம் சந்திர மௌலீஸ்வரர், தர்மாதிகாரி ரமணி அண்ணா மற்றும் அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வெங்கட்ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.