பதிவு செய்த நாள்
26
டிச
2022
06:12
பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழாக்கு வருகை புரிந்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழநி கோயிலுக்கு ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவு ஏற்படுத்தப்பட உள்ளது. என்றார்.
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 2023 ஜன., 27 அன்று நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கோயிலில் முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. இதற்கு வருகை புரிந்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "2019 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்று அதன் பின் கும்பாபிஷேகப் பணிகள் சிறிது தொய்வு ஏற்பட்டது. தமிழக முதல்வர் முதல்வரின் வழிகாட்டுதல்படி கும்பாபிஷேக பணிகள் தீவிர படுத்தப்பட்டு தற்போது பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்தில் 88 பணிகள் நடைபெறுகின்றன. அதில் 26 பணிகள் திருக்கோயில் நிர்வாகத்தாலும், 62 பணிகள் உபயதாரர்களால் நடைபெற உள்ளது. இதில் சிற்ப, ஓவிய,கட்டிடப் பணிகளுக்காக ரூ.16 கோடியும்,3 தங்க, வெள்ளி வேலைகளுக்கு ரூ.5 கோடியும் செலவிடப்பட உள்ளது. பழநி கோயிலுக்கு தமிழக பக்தர்கள், சபரிமலை பக்தர்கள் வெளி மாநில பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் தரிசனம் செய்கின்றனர். கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவாக நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கோயிலுக்கு 2006 இல் நடைபெற்ற கும்பாபிஷேகம், மீண்டும் 2018 இல் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சிலர் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆகமத்திற்கு எதிராக ஒரு பணியும் நடைபெறாது. எதிர்மறை கருத்துக்கள் விரைவாக பரவி விடுகிறது. எனவே கும்பாபிஷேக பணிகள் விரைவாக நடைபெறுவதை பாராட்டினால், பணிபுரிவர்கள் மகிழ்ச்சி அடைவார். பழநி கோயில் குறித்த பணிகள் வெளிப்படையாகவும், முறையாகவும் நடைபெற்று வருகிறது. மூலவருக்கு மருந்து சாத்துதல், கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் மற்றும் வீ.வி.ஐ.பி களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். பழநி கோயிலுக்குள் அலைபேசி கட்டுபாடு கொண்டு வருவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். 20க்கும் மேற்பட்ட மேற்பட்ட யானைகளுக்கு நீச்சல் குளம் உள்ளது. பழநி கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பின் கோயில் ரம்யமாக இருக்கும் என்றார். பழநி கோயிலுக்கு தமிழக முதல்வர் ரூ. 200கோடி பெருந்திட்ட வரைவு ஒன்று ஏற்படுத்தியுள்ளார். அதற்கான பணிகள் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதற்கான அடிப்படை பணிகள் விரைவில் துவங்கும். கோயில் தொகுப்பூதிய கல்லூரி ஆசிரியர்களுக்கு,ரூ. 8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பள உயர்வு வழங்க முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்கள்." என்றார். பேட்டியின் போது உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.