வடமதுரை: பழநி முருகன் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் என இரு திருவிழாக்கள் அதிமுக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகிறது. தைப்பூசத்தில் பாதயாத்திரை பயணத்திற்கும், பங்குனி உத்திரத்தில் தீர்த்த காவடிக்கும் பக்தர் முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் தைப்பூசத்தை முன்னிட்டு டிசம்பர் 2வது வாரத்தில் இருந்தே பக்தர்கள் குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் பக்தர்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும். திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வழியே வந்து அய்யலூர், எரியோடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியே பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.